
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சரவையிலும் ஆராயப்பட்டதோடு பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ஆரம்ப கட்ட பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக அறிய வருகிறது. எதிர்வரும் இரு வாரங்களில் சர்வகட்சி அரசாங்கம் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வௌ்ளியன்று 18 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக எதிரணியில் உள்ள கட்சிகள் மற்றும் ஆளும் தரப்பில் உள்ள கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தி தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அமைச்சரவையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ள அவர், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேவை ஏற்பட்டால் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அமைச்சர் தொகை அதிகரிக்கப்படும் எனவும் அறிய வருகிறது.
இதன்படி இன்னும் இரண்டு வாரங்களில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் பாராளுமன்றத்தில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.
தற்போது இடைக்கால அமைச்சரவையொன்று செயற்பட்டு வருவதுடன், சர்வ கட்சி அரசாங்கம் அமைந்ததும் நிரந்தர அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூடி இது குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சு.கவும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காது என கட்சி செயலாளர் தயாசிரி ஜெயசேகர அறிவித்துள்ளதோடு த.தே.கூ வும் இதே நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.