தற்போதைய நிலமையை சரியாகப் புரிந்துகொண்டு, தவறான சித்தாந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடித்து, ஏற்றுமதி மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து புதிய முதலீடுகளுடன் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசின் நோக்கமாக இருந்தது.
ஆனால் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் கோவிட்-19 தொற்றுநோய் நிலமை அனைத்து நாடுகளையும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது. பெரும் பணக்கார நாடுகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு தேடுகின்றன.
ரொக்க கையிருப்பு இல்லாத நம்மைப் போன்ற ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அந்த நிலமை பாதிக்கிறது. சர்வகட்சி அரசில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும் கலந்துரையாடினார்.
ஆனால் பதில் தோல்வியடைந்ததால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு மிகவும் வெற்றியடைந்துள்ளதுடன், கடன் உதவித் திட்டத்தை அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக, அரச தலைவர்களுடன் தொலைபேசி மூலமாகவும், அந்த நாடுகளின் தூதுவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.