அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கான சுதந்திரத்தை உச்ச நீதிமன்றம் பறித்துள்ள நிலையில், அங்குள்ள முன்னணி நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், அங்கு பெண்களுக்கு இருந்த 50 ஆண்டு கால உரிமை பறிக்கப்பட்டு விட்டதாக போராட்டங்கள் வலுத்துள்ளன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஆளும் மாகாணங்கள் கருக்கலைப்புக்கு உடனடியாக தடை விதித்துள்ளன. இதனால், தடை விதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள பெண்கள், கருக்கலைப்புக்கு வேறு மாநிலத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பெண் ஊழியர்களுக்கு பல முன்னணி நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரபல வால்ட் டிஸ்னி நிறுவனம், தனது பெண் ஊழியர்கள் கருக்கலைப்புக்காக வேறு மாகாணத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், அதற்கான முழு செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, கோல்டுமேன் சச், ஆப்பிள், உபெர், ஏர்பிஎன்பி, அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளன. கருக்கலைப்புக்காக பெண் ஊழியர்களுக்கு உடனடி பணியிட மாறுதல் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் தனது பெண் ஊழியர்களுக்கு இமெயில் மூலம் உறுதி அளித்துள்ளது.
அதே சமயம், டிவிட்டர், மெக்டெனால்டு, வால்மார்ட், கோககோலா, பெப்சி, மேரியாட் போன்ற பிற முன்னணி நிறுவனங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக, கருக்கலைப்புக்காக பிற மாகாணங்களுக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என ஜனநாயக கட்சி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கறுப்பர்-வெள்ளையர் திருமணத்துக்கு தடை?சுமார் 50 ஆண்டுகால கருக்கலைப்பு சுதந்திரம் பறிக்கப்பட்டது, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படுவது போன்ற சீர்த்திருத்தங்களைத் தொடர்ந்து, மேலும் பல உரிமைகளுக்கு தடை வருமோ என்ற அச்சம் அமெரிக்க மக்களிடம் எழுந்துள்ளது.
குறிப்பாக, வெள்ளையின மக்கள் கறுப்பின மக்களை மணந்து கொள்ளும் கலப்பு திருமணம், ஒரே பாலின திருமணத்திற்கு தடைகள் விதிக்கப்படுமா என பெரிய அளவில் விவாதங்கள் நடக்கின்றன.
கலப்பு திருமணம், ஒரே பாலின திருமணத்திற்கு தடை விதிக்கப்பட்டு அமெரிக்காவில் சட்டங்கள் இருக்கும் நிலையில் அவை நீதிமன்றத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில், தங்களின் பல உரிமைகள் பறிபோய்விடுமா என்ற அச்சம் அமெரிக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.