
சமையல் எரிவாயுவின் விலை 10 ஆயிரமாகவும்,ஒரு இறாத்தல் பாணின் விலை 400 ரூபாவாகவும் உயர்வடையும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். எனவே நாடு பாரிய நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள்.
ஆனால் நெருக்டிக்கு தீர்வு காண அரசியல் தியாகம் செய்து பதவி விலகமாட்டார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்டாயம் பதவி விலக வேண்டும் என இலங்கையை பாதுகாப்போம் அமைப்பின் தலைவர் பாஹியன்கல ஆனந்தசாகர தேரர் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், மகாசங்கத்தினருக்கும் இடையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அலரிமாளிகை,காலி முகத்திடல் உட்பட நாடுதழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் நாடு பாரிய எதிர்விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை பிரதமரிடம் எடுத்துரைத்தோம்.
பொருளாதார நெருக்கடி குறித்து அவதானம் செலுத்தும் போது எரிவாயுவி;ன் விலை 10ஆயிரமாகவும்,ஒரு இறாத்தல் பாணின் விலை 400 ரூபா வரை உயர்வடையும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள்.ஆனால் அரசியல் தியாகம் செய்து பதவி விலக தயாரில்லை என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தியாகம் செய்து பதவி விலகியே ஆக வேண்டும் என்றார்.