இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பொருளாதார மீட்சி, அபிவிருத்தி பங்குடைமை, பரஸ்பர பாதுகாப்பு, மீனவர்கள் விவகாரம் மற்றும் சர்வதேச ரீதியிலான ஒன்றிணைவு என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்தாகியுள்ளன.
இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக நிறைவடைந்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் மீனவர்கள் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் வடபகுதி உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி துறைமுகங்களின் அபிவிருத்திக்காக கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாடுகள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.