நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு ஏற்ப அமைச்சரவை எண்ணிக்கையை குறைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்மாதிரியாக செயற்பட்டால் தனது அமைச்சு பதவியை விட்டுக்கொடுக்க தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முகம்கொடுக்க அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வகட்சி மாநாட்டில் பல பிரேச்சணைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதில் அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.
அதில் எந்த பிரச்சினையும் இல்லை. தெரிவிக்கப்பட்ட பிரேரணைகளை ஆராய்ந்து ஜனாதிபதி அடுத்த கட்ட கூட்டங்களின்போது அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பார்.
அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததுபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்தால் நானும் அதற்கு தாயார்.
பொதுஜன பெரமுன சார்ப்பாக எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வருவேன். அத்துடன் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் அரசாங்கம் எடுக்கவில்லை.
தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான வாய்ப்பு எமக்கு இருந்தது. ஏனெனில் பல கட்சிகள் எமது அரசாங்கத்தில் இருக்கின்றன. தேசிய அரசாங்கம் அமைத்தால் அமைச்சரவை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவேண்டி ஏற்படும். அதனால் அதனை நாங்கள் செய்யவில்லை.
சர்வகட்சி மாநாட்டில் அவ்வாறானதொரு பிரேரணை தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுதொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். மேலும் சர்வகட்சி மாநாட்டுக்கு பிரதான எதிர்க்கட்சி உற்பட் பல கட்சிகள் வரவில்லை.
சர்வகட்சி மாநாட்டை கூட்டவேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே ஜனாதிபதி அதற்கு அழைப்பு விடு்த்தார். மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கமைய சர்வகட்சி மாநாட்டை கூட்டியதால்தான் அதிகமான கட்சிகள் வரவில்லையா என்ற சந்தேகம் தோன்றுக்கின்றது.
இருந்தபோதும் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுவருவதால் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் நிதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கி இருந்தார்.
அதனால் அரசாங்கம் என்ற வகையில் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாண இணைந்து செயற்படுவதே எமது நோக்கமாகும். அவ்வாறு இல்லாமல் பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதில்லை என்றார்.