சீனாவில் கொரோனா மீண்டும் தலைதூக்கிய நிலையில், அமெரிக்காவில் டெல்டாக்ரான் என்ற வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது உலகம் முழுவதும் புதிய அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சீனாவைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவில் தினசரி பாதிப்பு இருமடங்காக அதிகரித்து வருவதால், கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் வௌியிட்ட அறிக்கையில், ‘டெல்டாக்ரான்’ வைரஸ் தொற்றுகள் உலகம் முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்துள்ளது. எனவே, டெல்டாக்ரான் வைரஸ் தொற்று பரவல், உலகம் முழுவதும் புதிய அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்கா முழுவதும் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 10 ஆம் திகதி வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.