அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் அண்மையகாலங்களில் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகம், மக்களால் தாங்கிக்கொள்ளமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு, சர்வதேசத்தின் மத்தியில் நாடு சந்தித்துள்ள பாரிய பின்னடைவு உள்ளடங்கலாக தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளையும் முன்னிறுத்தி, அவற்றுக்குக் காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ‘முழு நாடும் அழிவில்: பொறுத்தது போதும், ஒன்றாய் அணிதிரளுங்கள்’ என்ற தொனிப்பொருளிலேயே இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அதன்படி அனைத்து ஆசனங்களும் உள்ளடங்கும் வகையில் நாடளாவிய ரீதியிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் அனைவரையும் கொழும்பிற்கு அழைத்துவருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளபோதிலும், இறுதித்தருணம் வரையில் போராட்டம் நடைபெறவிருக்கும் இடம் குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கும் கட்சி தீர்மானித்துள்ளது.
போராட்டம் நடைபெறவுள்ள இடம் பற்றிய தகவல்களை முன்கூட்டியே வெளியிடும் பட்சத்தில், அரசாங்கம் பொலிஸாரின் ஊடாக போராட்டத்திற்கு எதிரான தடையுத்தரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடும் என்பதனாலேயே அதனை இறுதிநேரம் வரையில் வெளிப்படுத்தாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கடந்த நவம்பர் மாதம் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தப்போராட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்போராட்டத்தில் மக்கள் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் பொலிஸாரினால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தின் முன்பாகத் திரண்ட மக்கள் கூட்டம் பேரணியாகச்சென்று காலிமுகத்திடலை அண்மித்துள்ள சுற்றுவட்டத்தை அடைந்த பின்னர், அங்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் உரையுடன் போராட்டம் நிறைவடைந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இம்முறை மக்கள் ஒன்றுகூடவேண்டிய இடத்தை முன்கூட்டியே அறிவிக்காமல், பாரிய மக்கள் போராட்டமொன்றுக்கான ஆயத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.