நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது வீதி அபிவிருத்திகள் தேசிய ஒப்பந்தக்கார்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன.
எனினும் தற்போதைய அரசாங்கமே அனைத்து வீதிகளையும் சீனாவின் ஒப்பந்தக்கார்களுக்கு வழங்கியதாக எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்திகள் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.
இந்தநிலையில் திருட்டு மற்றும் திருடுவது தொடர்பாக தெரியுமாக இருந்தால், அதனை உடனடியாக கண்டுபிடிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாரி கவிரட்ன,அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோவிடம் கேட்டுக்கொண்டார்.
எனினும் குற்றங்களை மேற்கொண்டவர்கள் எந்த அரசாங்கம் வந்தாலும், நிரபராதி என்ற வகையில் விடுதலை செய்யப்படக்கூடாது என்றும் ரோஹினிகுமாரி கோரிக்கை விடுத்தார்.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ, 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் கொரோனா காரணமாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. சவால் விடுக்கப்படுமாக இருந்தால், விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் 18ஆயிரம் லட்சம் ரூபா ஊழல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியிடம் உள்ள மனிதாபிமானத்தை விளையாட்டாக கருதவேண்டாம் என்று அவர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் கேட்டுக்கொண்டார்.