பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74வது தேசிய சுதந்திர தினம் உதயமாகியுள்ளது.

வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம்.

ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான இத்தகைய போராட்டங்கள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

ஒரு துளியேனும் இரத்தம் சிந்தாமல் காலனித்துவ சுதந்திரத்தை அடைந்தமை இன, மத, கட்சி பேதமின்றி சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் என அனைத்துத் தலைவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாகும்.

74 வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த சுதந்திரத்தின் உண்மையான உத்வேகம் உள்நாட்டுப் போராட்டங்களினாலும், மூன்று தசாப்த கால பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தினாலும் இந்நாட்டு மக்களுக்கு இல்லாமல் போனது.

போர்வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலுக்கும் அர்ப்பணிப்பிற்கும் தலைமைத்துவம் வழங்கி இத்தால் 13 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களுக்கு அச்சம் இல்லாத நாட்டுக்கு மீண்டும் உரிமைக் கொள்ள முடிந்தது.

அந்த சுதந்திரம் மீண்டும் சவாலுக்கு உட்பட்ட நிலையில் நாட்டின் ஆட்சியை மீண்டும் பொறுப்பேற்று நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்திய நாம் உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும்  பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மாபெரும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்.

இந்த அழிவுகரமான தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றும் திட்டம் இப்போது உலக அளவில் பாராட்டப்பட்டிருப்பது ஒரு நாடாக நம் அனைவருக்கும் ஒரு பெரிய சாதனையாகும்.

சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது. ஒருவரையொருவர் மதித்து, மற்றவரின் இருப்புக்கு இடையூறாக இல்லாத சமூக மாற்றத்தின் மூலம் சுதந்திரத்தின் அர்த்தத்தை விரிவுபடுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை.

இந்த தேசிய சுதந்திர தினத்தில், எமது தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்து மகத்தான தியாகங்களை செய்த அனைத்து மாவீரர்களையும் நாம் மரியாதையுடன் நினைவு கூர்வோம். சவால்களை முறியடித்து நாளைய விடியலுக்காக சுபீட்சமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE
Audio Player