“கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்களை மறந்துவிட்டு, அடுத்த மூன்று வருடங்கள் குறித்து நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினுடைய இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள், நேற்று காலை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்கட்சிகளுக்கே கடந்த காலம் முக்கியமானது. நாம் எப்போதும் எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், கடந்த காலத்தை அல்ல. நாட்டைப் பற்றிய நம்பிக்கையை யாரும் கைவிடக் கூடாது. கடந்த இரண்டு ஆண்டுகளை விமர்சகர்களுக்கு விட்டுவிட்டு, எதிர்காலத்தை நம் கையில் எடுக்க வேண்டும்” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
“துறைமுகங்களின் தரவரிசைக்கான தற்போதைய அல்ஃபலைனர் அளவுகோலின்படி, உலகில் 23ஆவது இடத்தில் கொழும்புத் துறைமுகம் உள்ளது. புதிய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 13ஆவது இடத்தைப் பெறும்” என, நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.