வங்கக்கடலில் இம்மாத (நவம்பர்) தொடக்கத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அதன்பிறகு தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
சென்னையில் கனமழை
இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறாவிட்டாலும், சென்னையில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவு கனமழை கொட்டியது. அன்று ஒரே நாளில் 23 செ.மீ. மழை பதிவானது.
இதனால், சென்னை மாநகரம் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதியில் இருந்த குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ள நீரை வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டது.
மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 7-ந்தேதி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியையும் துரிதப்படுத்தினார். தொடர்ந்து, 6 நாட்கள் இந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.
சென்னையில் வெள்ளநீர் தேக்கம் குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மழைநீர் வடிகால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
8-வது நாளாக…
இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்ததுடன், அதை மறுத்தும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டங்களை நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
சென்னை திரும்பிய முதல்-அமைச்சர், 8-வது நாளாக நேற்று சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார். முதலில் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு சென்ற அவர், லாக்மா நகரில் நடந்த கொரோனா தடுப்பூசி மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து சென்னை திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பாதிப்பை கேட்டறிந்தார்
பின்னர் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதியில், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அவர், பெரம்பூர் பல்லவன்சாலை, கே.கே.நகர் அவென்யூ சாலை அருகே மழையால் ஏற்பட்டிருந்த பள்ளத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து உடனடியாக சரி செய்வதற்கு அலுவலர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்று பாதிப்பின் விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
நிவாரண உதவிகள்
சென்னை 70 அடி சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு, பெரவள்ளூர் ஆகிய பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணிகளையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து ஜம்புலிங்கம் மெயின் ரோடு, ஜே.ஆர். திருமண மண்டபத்தில் நபிகள் நாயகம் தெரு, வெற்றி செல்வி அன்பழகன் நகரில் அமைந்துள்ள எஸ்.ஐ.பி. மெமோரியல் அறக்கட்டளை காப்பகத்தை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிவாரண பொருட்களை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி தேவைகளை கேட்டறிந்தார்.
அரசு, தொண்டு நிறுவனங்கள் சார்பில்
அதன்பின்னர் சென்னை எழும்பூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட டோபிகானா பகுதியில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு சென்ற இடங்களில் அரசின் சார்பிலும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தி.மு.க. சார்பிலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இதில் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
பயிர் சேதங்களை ஆய்வு செய்ய குழு
கேள்வி:- தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறீர்கள், தொடர்ச்சியாக இன்றும் ஆய்வு மேற்கொள்ள வந்திருக்கிறீர்கள், தற்போது நலத்திட்ட உதவிகள் வழங்குகிறீர்கள், இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?.
பதில்:- அது சம்பந்தமாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு எடுக்க சொல்லி இருக்கிறோம்.
இன்று அல்லது நாளை அந்த அறிக்கையை அவர்கள் அளிப்பார்கள். அதன் பிறகு முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் நிச்சயமாக செய்வோம்.
பிரதமருக்கு கடிதம்
கேள்வி:- கன்னியாகுமரிக்கு எப்போது செல்கிறீர்கள்?
பதில்:- நாளை (அதாவது இன்று) செல்வதற்கு முடிவு செய்திருக்கிறேன்.
கேள்வி:- டெல்டாவில் பயிர்சேதம் அதிகமாயிருக்கிறது, பிரதமர் நரேந்திரமோடிக்கு இழப்பீடு கோரி கடிதம் எழுதுவீர்களா?.
பதில்:- மொத்த கணக்கீடு வந்தபின்பு அதையெல்லாம் தயார் செய்து பிரதமருக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால், இங்கேயிருக்கின்ற அமைச்சர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அனுப்பி பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.
விரைவாக அகற்றப்படும்
கேள்வி:- பட்டாளம், புளியந் தோப்பு பகுதிகளில் இன்னும் கழிவுநீர் தேங்கியிருக்கிறதே…
பதில்:- பழைய செய்தியை ஒளிபரப்பி கொண்டிருக்கிறீர்கள். தேங்கியது உண்மைதான். ஆனால் விரைவாக தேங்கிய நீரை அப்புறப்படுத்தி விட்டோம்.
கேள்வி:- தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறீர்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- நான் அதைப்பற்றி கவலைப்படுவதே கிடையாது. என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது. அதற்காகத்தான் மக்கள் என்னை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், பெரிய வெற்றியை கொடுத்தார்கள். நான் இன்றைக்கும் சொல்கிறேன், ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எங்களுடைய கொள்கை. அந்த வழியில் என்னுடைய பயணம் இருக்கும்.
விசாரணை கமிஷன்
எதிர்க்கட்சிகள் என்ன புகார் சொன்னாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அவர்கள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை இந்த மழைக்காலம் முடிந்ததற்கு பிறகு அதற்கென விசாரணை கமிஷன் வைக்கப்பட்டு எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, நிச்சயமாக யார் குற்றவாளிகளோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேட்டியின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் அ.வெற்றி அழகன், தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி (வடக்கு) பொறுப்பு அதிகாரியுமான தா.கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.