பிரான்சில், சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நடந்த வன்முறை குறைந்து வருகிறது. நேற்று பாரீசில் பல இடங்களில் அமைதி நிலவினாலும் ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது. இதுவரை 2,400க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிஸ் அடுத்துள்ள புறநகரான நான்தெரே பகுதியில் கடந்த 27 ம் தேதி போக்குவரத்து விதியை மீறியதாக சில இளைஞர்களே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் 17 வயதான நாஹெல் என்ற வேன் டிரைவராக பணியாற்றும் சிறுவனை, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அச்சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் சிறுவன் கொல்லப்பட்ட செய்தி பரவியதால், பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் வெடித்தது.
இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிரடிப்படை படையினர் குவிக்கப்பட்டனர். பாரீஸ், லியோன், மார்ஷெலே உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கியுடன் ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றுடன் தயார் நிலையில் இருந்தனர்.
இதனையடுத்து பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் குறைந்தன. அதேநேரத்தில் மத்திய பாரீஸ் பகுதியில் பதற்றம் காணப்பட்டது. மார்ஷெலே, நைஸ் மற்றும் ஸ்ட்ராஸ்போர்க் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மோதல் ஏற்பட்டது. மார்ஷெலே பகுதியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சில இளைஞர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
பாரீசின் சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில், மக்கள் ஒன்று கூட அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு வருபவர்களை தீவிர சோதனைக்கு அனுப்பப்பட்டனர். கொள்ளை மற்றும் சூறையாடல் முயற்சியை தடுக்கும் பொருட்டு அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 2,400க்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அவர்களின் சராசரி வயது 17 ஆக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். போராட்டம் நடத்த நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலையில் பொதுப் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 4 நாட்களுக்கும் மேலாக நடந்த கலவரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. 700க்கும் மேற்பட்ட கடைகள், வங்கிகள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டு உள்ளன.
பிரான்சில் நடக்கும் இந்த வன்முறை, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ஜெர்மன் பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார். இந்தாண்டில் மேக்ரான் ரத்து செய்யும் 2வது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இதனிடையே, சிறுவன் நாஹெலின் உடல்,ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.