இன்று நடைபெற்று வரும் யுத்தமானது நோர்வேயிலும் பெரும் நெருக்கடிகளையும், சவால்களையும் ஏற்படுத்தலாம் என அரசியல் அவதானிகள் எண்ணுகின்றனர்.
கடந்த 28.10.2022ம் நாளன்று பேர்கன் நகராட்சியின் அவசரகால பாதுகாப்பு பொறுப்பாளர் Rune Bratland முக்கிய தகவலினை வெளியிட்டுள்ளார்.
இயற்கை அனர்த்தங்கள், நாசவேலைகள், தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது யுத்தங்களால் பலர் மின்சாரம் அல்லது தண்ணீரை இழக்க நேரிடலாம், அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவது மிகவும் கடினமாகலாம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நலனுக்காக பொறுப்பேற்கவேண்டும்.
எதிர்பாராத ஒன்று நடந்து விட்டால் அதனை சந்திப்பதற்கு தயாராக இருக்க்கவேண்டும். உக்ரைனில் நடைபெறும் போர் மற்றும் மின் நெருக்கடியானது சுய தயாரிப்புக்கான அவசியத்தை உணர்த்தியுள்ளது.
குறைந்தபட்சம் 72 மணிநேரம் மின்சாரம், இணையம், தண்ணீர், உணவு மற்றும் மருந்து வசதி இல்லாமல் சமாளிக்க நீங்கள் தயாராக இருந்தால் தான் நாங்கள் ஒரு சமூகமாக சிறப்பாக வாழ தயாராக இருக்கிறோம் எனக் கொள்ளலாம்.
அக்டோபர் 31 தொடக்கம் நவம்பர் 6 வரை நாடு முழுவதும் சுய தயாரிப்பு வாரம். சிலநாட்களுக்கு நமக்கு அவசியமாய் தேவையானவை திடீரென்று கிடைக்காமல் போனால், உங்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி உங்கள் அன்புக்குரியவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பை பயன்படுத்துங்கள். முடிந்தவரை உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் கவனித்துக்கொள்ள முடிந்தால், உதவி அவசியம் தேவைப்படுகிறவர்களுக்கு உதவுவதில் நகராட்சி கவனம் செலுத்தமுடியும்.
உலர் உணவு, மெழுகுவர்த்திகள், மின்கலன்கள், தீப்பெட்டிகள், விறகு, தண்ணீர் மற்றும் கேஸ் கிரில் ஆகியவை எதிர்பாராத நீர் அல்லது மின்சார இழப்பைச் சமாளிக்கும் எளிய பொருட்களாகும்.