“ ஆயிஷாவை சகதியில் அமிழ்த்திவிட்டேன்” – சந்தேக நபர் வாக்குமூலம்

அவள் வீடு திரும்புவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓடி மறைந்திருந்தேன். கோழி இறைச்சியை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த போது தூக்கிச்சென்று, சகதில் அமிழ்த்தினேன் என அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலமளித்துள்ளார்.

முகத்தில் துணியொன்றினால் மூடி, தூக்கிச்சென்றேன். இதனை யாரிடமாவது சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில், சதுப்பு நில சேற்றில் முகத்தை அமிழ்த்தி சிறுமியின் உடலின் முதுகுப்பகுதியில் தன் முழங்காலினால் ஊன்றி உயிர்போகும் வரையிலும் அமிழ்த்திகொண்டிருந்தேன்

சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலைத் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான ‘பல்லி குட்டி’ என்றழைக்கப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு வாக்குமூலமளித்துள்ளார்.

28 வயதான அவர், அங்குள்ள ஹோட்டலில் கொத்து ரொட்டி தயாரிக்கும் கொத்துபாஸ், ஐஸ் எனும் போதைப்பொருளுக்கும் அடிமையானவர்.

சிறுமியின் ஜனாஸா, இன, மத, மொழி, பேதங்களை கடந்து, ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றிரவு (30) நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுமியின் மரணத்துக்கு வாய்,மூக்கு வழியே சேற்றுடன் கலந்த நீர் உட்சென்று நுரையீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புக்களில் கலந்தமை பிரதான காரணம் என சட்ட வைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

பிரதான சந்தேக நபரை 48 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் நேற்று (30) அனுமதியளித்திருந்தது.

தனது வீட்டிலிருந்து கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள இறைச்சி கடைக்கு கடந்த 27ஆம் திகதி சென்றிருந்த போது பாத்திமா ஆய்ஷா எனும் சிறுமி காணாமல் போயிருந்தார்.

24 மணிநேரத்தை கடந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி மாலை வேளையில் சதுப்பு நில பகுதியில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

பல ​கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறுமி கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட சிறுமியின் உறவினர் ஒருவர் தொடர்பில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவதானம் செலுத்தி அவரை கைது செய்த மேற்கொண்ட விசாரணைகளின் போதே மேற்கண்ட விவரம் அம்பலமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE