உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை முற்றிலுமாக அழித்த ரஷ்ய படையினர், அங்குள்ள உக்ரைன் படையினர் சரணடைந்தால், அவர்கள் உயிர் பிழைக்க உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்ய படையினர் தொடுத்துள்ள போர், எட்டாவது வாரத்தை எட்டியுள்ளது.
உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்ய படையினர், அந்நகரத்தை நேற்று முன் தினம் முற்றிலுமாக அழித்தனர். உக்ரைன் ராணுவத்தினர், அங்குள்ள ஸ்டீல் தொழிற்சாலையில் பதுங்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் சரணடைய ரஷ்ய ராணுவ ஜெனரல் மிகெயில் மிஸின்ட்சேவ் அவகாசம் அளித்துள்ளார். உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண்அடைந்தால், உயிர் பிழைக்க உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உதவி கேட்கிறது ரஷ்யாபல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளதை அடுத்து ஐரோப்பா மற்றும் சீனாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி தடைபட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு குறைந்துள்ளதை அடுத்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யுமாறு இங்குள்ள நிறுவனங்களிடம் ரஷ்ய வர்த்தக கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக இரு நாட்டு வர்த்தக அமைப்புகள் நாளை மறுநாள், ‘ஆன்லைன்’ வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளன.ஐரோப்பிய யூனியனில் உக்ரைன்ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இணைவதற்கான முதற்கட்ட விண்ணப்பத்தை உக்ரைன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் உடனடியாக தங்கள் நாட்டை உறுப்பினராக சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறிய உக்ரைன், அதற்காக முறையாக விண்ணப்பித்து இருந்தது. இந்நிலையில் நேற்று ஐரோப்பிய யூனியனின் உறுப்பினருக்கான கேள்வி தாள்களை பூர்த்தி செய்து, அதை ஐரோப்பிய யூனியன் துாதர் மட்டி மாசிக்காசிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்து உள்ளார். ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை உறுப்பினராக இணைப்பது குறித்து முடிவு எடுப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இது கருதப்படுகிறது.