சீனாவின் புதிய விண்வெளி நிலையத்தில், ஆறு மாதங்கள் தங்கி ஆய்வு செய்து சாதனை படைத்த மூன்று சீன விண்வெளி வீரர்கள், நேற்று பாதுகாப்பாக பூமி திரும்பினர்.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆராய்ச்சி களை மேற்கொள்ள வீரர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நம் அண்டை நாடான சீனா, கடந்த ஆண்டு தனி விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்தது. ‘தியான்ஹாங்’ என பெயரிடப்பட்ட அந்த விண்வெளி நிலையத்திற்கு, கடந்த அக்டோபர் 15ம் தேதி, ஜாய் ஜின்காங், வாங் யாபிங் மற்றும் யே குவாங்பு ஆகிய மூன்று வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கி ஆய்வு செய்த அவர்கள், நேற்று பூமிக்கு திரும்பினர். சீனாவின் இன்னர் மங்கோலியா பிராந்தியத்தில் உள்ள கோபி பாலைவனத்தில், அவர்கள் மூவரும், ‘பாராசூட்’ உதவியுடன் காலை 9:56 மணிக்கு பாதுகாப்பாக வந்து தரையிறங்கினர்.மூன்று விண்வெளி வீரர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக, மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதற்கு முன், 92 நாட்கள் விண்வெளியில் தங்கி, சீன வீரர்கள் சாதனை படைத்திருந்தனர். இந்நிலையில், அந்த சாதனை தற்போதுமுறியடிக்கப்பட்டுள்ளது.