ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்தாண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்த தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது, தலிபான்களுக்கு அஞ்சி பலரும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு பல இடங்களில் பயங்கரவாத தாக்குதலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோஸ்ட் மற்றும் குணார் ஆகிய இரு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கு ஆப்கானிஸ்தானின் அமைதி கண்காணிப்பகத்தின் நிறுவனர் மற்றும் பத்திரிகையாளரான ஹபீப் கான் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்தி வரும் போர் குற்றங்களை கவனத்தில் கொள்ளும்படி சர்வதேச குற்ற நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடும் ஆம்னெஸ்டி சர்வதேச அமைப்புக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து பாக்., தூதருக்கு தலிபான்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்.