உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்த பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்., 24ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் 52 வது நாளை எட்டியுள்ளது. இதற்கு பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உக்ரைன் நாட்டிற்கு நிதி மற்றும் ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன. அதில் பிரிட்டனும் அடக்கம். உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை தந்து உதவியதுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டிற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சன் மற்றும் பிரிட்டன் நாட்டு உயர் அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 900 உடல்கள் கண்டெடுப்பு
உக்ரைன் பொது மக்கள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கீவ் அருகேயுள்ள புச்சா பகுதியில் கைகள் கட்டப்பட்டு, துன்புறுத்தப்பட்ட நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களை ரஷ்ய ராணுவம் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய படையினர் பின் வாங்கிய நிலையில், உக்ரைன் ஆய்வு மேற்கொண்டது. அதில், கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 900 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதில் 95 சதவீதம் பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் கார்கிவ் நகரில் 10 பேரும், மிலகோவ் நகரில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். கீவ் நகரில் உள்ள ராணுவ தொழிற்சாலை ஒன்றையும் ரஷ்ய ராணுவம் அழித்துள்ளதுடன், இரும்பு தொழிற்சாலையை சேதப்படுத்தி உள்ளது.