ரஷ்யாவின் முப்படை தாக்குதல்களால் உக்ரைனில் பல நகரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கார்கீவ் நகரம் முற்றிலும் உருகுலைந்திருக்கிறது. கார்கீவ் நகரத்தை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கின்றன.
நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சுற்றிவளைத்த ரஷ்ய விமானங்களில் குண்டுமழை பொழிந்தன. ரஷ்ய தடைப்படையினரும் தங்கள் பங்கிற்கு கட்டடங்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். பல்முனை தாக்குதல்களால் வீடுகளும், கட்டடங்களும் கற் குவியல்களாக காட்சியளிக்கின்றன.
தீப்பற்றி எரியும் வீடுகளை அணைக்கும் முயற்சியில் உக்ரைன் படையினர் ஈடுபட்டுள்ளனர். தீயை அனைத்துக் கொண்டிருக்கும் போது ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடர்ந்ததால் பெரும் பதற்றம் நிலவியது. இதனிடையே உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி குற்றம்சாட்டியுள்ளார்.
மரியுபோல் நகரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உக்ரைன் படைகள் மீதும், மக்கள் மீதும் ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஜெலன்ஸ்க்கி கூறியுள்ளார். ரசாயன ஆயுத தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு உலக தலைவர்களை உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.