ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இதற்கு ஆதரவு அளித்த உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது கடந்த 6 வாரங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
உக்ரைன் படைகளின் கடும் பதிலடியால், பல நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி உள்ளன. இதனிடையே உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, பொதுமக்களை படுகொலை செய்ததாக குற்றம்சாட்டி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் வழக்கம் போல் இந்தியா பங்கேற்காமல் நடுநிலை வகித்தது. ஐ.நா.வின் இந்த நடவடிக்கை ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதரவு அளித்த உலக நாடுகளுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். மனித உரிமைகள் என்ற கருத்துடன் ரஷ்யாவிற்கு நீண்ட காலமாக எந்த தொடர்பும் இல்லை என்று அவர் விமர்சித்தார். ரஷ்ய அரசு மற்றும் ரஷ்ய இராணுவம் மனித பாதுகாப்பு, மனித உரிமைகள் என்ற கருத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
போரோடியங்காவில் உள்ள இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்த ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரம் முழுவதுமாக அழிந்துவிட்டதாக சுட்டிக்காட்டிய அவர், மரியுபோலை ஒழுங்குபடுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.