
சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் பெரும் குற்றமாக கருதப்படுகிறது. 15 கிராம் ஹெராயினுடன் சிக்கினாலே மரண தண்டனை நிச்சயம். இதுபோன்ற வழக்கில் பல மலேசிய, சிங்கப்பூர் தமிழர்கள் சிக்கி, மரணத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
மலேசிய தமிழரான பவுசி ஜெப்ரிடின், சிங்கப்பூர் தமிழரான ரோஸ்லன் பாகர் ஆகியோர், சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் 2010ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற நாள் குறித்த போதெல்லாம், பலமுறை இவர்களின் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
இருவரும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் என அவர்களின் வழக்கறிஞர்கள் கூறி வருவதே இதற்கு காரணம். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இவர்களின் மரண தண்டனை மீண்டும் நிறைவேற்றப்பட இருந்தது. அதை நிறுத்தும்படி அதிபர் ஹலிமா யாகூப்புக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. இதை ஏற்ற அவர், தண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்.
சிங்கப்பூரில் ஏற்கனவே ஹெராயின் கடத்தல் வழக்கில் நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற மலேசிய தமிழர் உட்பட பல தமிழர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். இவர்களுக்கு மன்னிப்பு வழங்கும்படி பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.