நிக்கவரெட்டிய பகுதியில், இரண்டு களஞ்சியங்களுக்காக, நுகர்வுக்குப் பொருத்தமற்ற நெல்லைக் கொள்வனவு செய்தமை தொடர்பில், இரண்டு அதிகாரிகள், பணியிலிருந்து இடைநீக்கம்செய்யப்பட்டுள்னர்.
வடமேல் கமநல சேவை அமைப்பின் பிரதிநிதிகள், இது குறித்து விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறியப்படுத்தியதை அடுத்து, உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய, கணக்காய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், குறித்த களஞ்சியங்களில் சுமார் 15 இலட்சம் கிலோகிராம் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 3 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகளவான நெல், விலங்கு உணவுக்காக பயன்படுத்துவது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திய வடமேல் பிராந்திய பதில் முகாமையாளரும், அந்தக் களஞ்சியங்களின் உதவிப் பொறுப்பாளரும் இவ்வாறு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த இரு நெல் களஞ்சியங்ளும், அதிகாரிகளினால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.