முரண்பாட்டை ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைக்கு ஒரு சாதகமான தீர்வை வழங்க வேண்டும்- அன்ரனி ஜேசுதாசன்

மீனவ சமூகத்திற்கு இடையிலே முரண்பாட்டை ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைக்கு ஒரு சாதகமான தீர்வை வழங்க வேண்டும் என மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினுடைய சமாதான மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடலின் தேசிய இணைப்பாளரும், வடகிழக்கு பிராந்தியங்களிற்கான இணைப்பாளருமான அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களுடைய தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சனையானது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. சுமார் இருபது வருடங்களாக இந்த பிரச்சனை நீடித்த போதிலும் இலங்கை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த, எந்த அரசும் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை வழங்குவதற்கு முன்வரவில்லை.

கடந்த காலங்களிலே இந்திய மீனவர்களுடைய வருகை என்பது ஆக்கிரமிப்பு இலங்கை கடற்பரப்புக்குள்ளே சுமார் 1500க்கும் மேற்பட்ட படகுகள் கிழமையிலே மூன்று நாட்கள் வந்து இங்கே தொழிலில் ஈடுபடுவதனால் எம்முடைய மீனவர்கள் தொழிலில் ஈடுபட முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
அதே நேரம் மீனவர்களுடைய முப்பது வருட கால யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மீனவர்களுடைய வலைகள், வளங்கள், அழிக்கப்படுகிறது. கடந்த கிழமைகளில் கூட சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வலைகள் இந்திய இழுவை மடிகளினால், அறுக்கப்பட்டிருக்கிறது.

எம்முடைய நாட்டு மீனவர்கள் குறிப்பாக, யுத்தத்திலே பாதிக்கப்பட்ட வடபகுதியிலே யாழ்ப்பாணத்திலே தொடர்ந்து இந்த பிரச்சனை, நீடித்து வருகிறது. கடந்த இருபத்தி ஏழாம் திகதி மீன்பிடிக்காக சென்ற இரு மீனவர்கள், மீனவர்கள் கூறுகின்றபடி இந்தியவர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியனுடைய, இழுவை மடிகளால், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது வரைக்கும், அதற்கான சரியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறி இருக்கிறது. 27 ஆம் திகதி இரண்டு மீனவர்கள் இறந்து, மீனவர்களுடைய வலைகள் அறுக்கப்பட்டு மீனவர்கள் தங்களுடைய உரிமையை வென்றெடுப்பதற்காக போராடுகின்ற போது நீதிமன்ற தடை உத்தரவை எடுத்திருக்கின்றார்கள்.

இவ்வளவு காலம் புரையோடிப் போயிருக்கிற இந்த பிரச்சனைக்கு எங்களுடைய நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றன. 2017 இலக்கம் 11 சட்டம், 2018 இலக்கம் ஒன்று, வெளிநாட்டு படகுகளை கண்காணிப்பதற்கான சட்டம். இந்த சட்டங்களை பயன்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாத அரசாங்கமாக இருக்கிறது. அன்று மீனவர்கள் வந்து கடலிலே மோதுவதற்கான ஒரு சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

ஏனென்றால் ஒரே இனத்தைச் சார்ந்த மீனவர்கள் இரு நாட்டு மீனவர்களாக இருக்கலாம். ஆனால் ஒரு சமூகத்தை சார்ந்த மீனவர்கள் இவ்வாறு முரண்பட்டு கொள்வதோ, தாக்கிக் கொள்வதோ, ஒரு ஆரோக்கியமான செயல் அல்ல என்பது நாங்கள் அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அப்படி இருந்தும் இரு நாட்டு மீனவர்களும் கடலிலே மோதிக் கொள்வதற்கான சூழ்நிலையை இரு நாட்டு அரசுகளும் உருவாக்கி இருக்கின்றன.

ஆகவே இதற்கு சாதகமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முற்பட வேண்டும்.  மீனவ சமூகத்திற்கு இடையிலே முரண்பாட்டை ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைக்கு ஒரு சாதகமான தீர்வை வழங்க முன்வர வேண்டும்.
மீனவர்கள், மீனவ சங்கங்கள் பல வருடங்களாக இந்த பிரச்சனைக்கு தீர்வை கேட்டு போராடிய போதிலும் இதற்கான ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இதற்கான முடிவை தருவதற்கு முயற்சிக்கவில்லை. ஏனென்றால் இவர்கள் தங்களுடைய பூகோள அரசியலை இந்தியாவுக்குள்ளே, இந்தியாவையும் வைத்துக்கொண்டு நடத்துவதால் பொருளாதார ரீதியான விடயங்களிலே இந்தியாவோடு இணங்கி செல்வதால் இவர்கள் இதற்கான தீர்வை வழங்குவதற்கு முற்படுவதில்லை. இதனால் இரு நாட்டு மீனவர்கள் இரு சமூகங்களுக்கு இடையிலே முரண்பாடு தோற்றுவிக்கப்படுகிறது. இரு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்திய இழுவை மடியிலே வருகின்ற இந்திய இழுவை மடியானது, அரசியல்வாதிகளுக்கும், முதலாளிமாருக்கும் சொந்தமானது. இங்கே வருகின்றவர்கள் கூட, அப்பாவி மீனவர்கள். ஆனால் அவ்வாறு வருகின்ற மீனவர்களுக்கு இடையிலே முரண்பாடு ஏற்படுவது என்பது மிகவும் ஒரு கண்டிக்கத்தக்க மோசமான விடயமாக இருக்கிறது.
ஆகவே இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு எம் நாட்டு சட்டத்தை பயன்படுத்தி கடற்படைக்கு அந்த அதிகாரங்களை கொடுத்து எம் நாட்டுக்குள்ளே வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE