கனடாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று உலகளாவிய ரீதியில் தமிழர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், கனடா நிகழ்வின் சர்ச்சைக்குரிய விடயமாக மாறிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும், அவருடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்து கொண்டமையே இக் குழப்ப நிலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் அங்கிருந்து கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டு கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
கனடாவில் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியானதை அடுத்தே அவருக்கு எதிரான எதிர்ப்பலைகள் ஆரம்பமாகின.
சுமந்திரன் கனடாவிற்கு வரக்கூடாது என்று அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பாக ஈழத்து பெண் ஒருவர் சுமந்திரன் மீது தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தும் வீடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.