தலைநகர் டெல்லியில், இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால், காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள் என, டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது.
இதை அடுத்து, டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தும் டெல்லி அரசு உத்தவிட்டது.
மேலும் முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் டெல்லி அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
டெல்லி அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நகரங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
நேற்று இரவு வெளியிடப்பட்ட காற்று தர மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி. நச்சுப் புகை மூட்டத்தால் நகரம் பல நாட்களாக போராடி வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களில் பாதி பேரை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று தர குறியீடு இன்று 379 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.