வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்துள்ளது.
இந்நிலையில் எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு (Vanniyar community) மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு (Reservation) வழங்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.
இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்.
எம்பிசி பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் 25க்கு மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனிடையே, அவசரம் கருதி தினந்தோறும் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டி இருப்பதால் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு மாற்றப்பட்டது.
அதன்படி சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு தினந்தோறும் நீதிபதிகள் விசாரணை நடைபெற்றது. அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.