இலங்கையில் போத்தல் குடிநீரின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை!

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் இலங்கை தண்ணீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை நீக்கப்படாவிட்டால், போத்தல் குடிநீரை பத்து ரூபா முதல் இருபது ரூபா வரை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட லேபிள்கள், ஆய்வக உபகரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள், பிளாஸ்டிக் மூடிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிப்பதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கை தர சான்றிதழைக் கொண்ட 147 போத்தல் நீர் உற்பத்தியாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ளனர்.

அனைத்து போத்தல் தண்ணீருக்கும் இலங்கை தர நிலைகளை கட்டாயமாக்குவதற்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அங்கீகாரம் வழங்குமாறும் தொழில் துறையினர் இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) போத்தலில் உள்ள பச்சை முத்திரையை சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் காரணியாக அடையாளம் கண்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபை இலங்கை தர நிர்ணய நிறுவனத்துக்கு அறிவித்துள்ள நிலையில், பொலித்தீன் படத்தையும் தடை செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE