சீனாவின் பிரபலமான மாமிச சந்தையில் ஆய்வுகளை முன்னெடுத்த நிபுணர்கள் 18 மிகக் கொடிய கிருமிகளை கண்டெடுத்துள்ள நிலையில், இன்னொரு பெருந்தொற்றுக்கான வாய்ப்பு தொடர்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன், மாமிசம், பறப்பன, ஊர்வன என அனைத்தும் விற்பனை செய்யப்படும் சீனாவின் பிரபலமான வூஹான் மாமிச சந்தை மீண்டும் கவனத்தை பெறுகிறது.
2019ல் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படும் இந்த மாமிச சந்தையில் இருந்து தற்போது மிகக் கொடியதாக கருதப்படும் 18 கிருமிகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரித்தானிய விஞ்ஞானி டாக்டர் Eddie Holmes தெரிவிக்கையில், வூஹான் மாமிச சந்தைக்கு சென்று ஆய்வு முன்னெடுத்து திரும்பிய பின்னர், மிருகங்களில் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதை சீனத்து ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, வூஹான் சந்தையில் இருந்து வனவிலங்கு மாமிச வகைகளை வாங்கி, சமைத்து சாப்பிடும் நிலை அதிகரித்துள்ளதால் இன்னொரு பெருந்தொற்றுக்கான வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் நவம்பர் 12 அன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், வூஹான் சந்தையில் இருந்து 71 பாலூட்டி வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் 18 கிருமிகள் அதிக ஆபத்து கொண்டவை எனவும், அவை மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சிவெட் எனப்படும் ஒருவகை பூனைகளில் காணப்படும் நுண்ணுயிரிகள் மிகவும் கவலைக்குரியவை என தெரிவித்துள்ளனர்.