நவம்பர் 14 மற்றும் 15-க்கு இடைப்பட்ட இரவு முதல் நவம்பர் 20 மற்றும் 21-க்கு இடைபட்ட இரவு வரை இந்திய ரயில்வே வழங்கும் பல சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.
புதுடெல்லி: பயணிகள் சேவைகளை சீரமைக்கும் முயற்சியில், அடுத்த ஏழு நாட்களுக்கு இரயில்வே பயணிகள் முன்பதிவு முறையை (PRS) சில மணி நேரங்களுக்கு மூட இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது என்று ரயில்வே அமைச்சகம் இன்று (நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
தற்போது படிப்படியாக பயணிகள் சேவையை சீரமைக்கும் பணியில் ரயில்வே (Railways) ஈடுபட்டுள்ளது. புதிய ரயில் எண்களின் புதுப்பித்தலுடன் சிஸ்டம் டேட்டாவை மேம்படுத்துவது இந்தச் செயல்முறையில் அடங்கும்.
“பயணிகள் சேவைகளை சீரமைக்கவும், கோவிட்-க்கு முந்தைய சேவையின் நிலைக்கு படிப்படியாக திரும்பவும், ரயில்வே பயணிகள் முன்பதிவு அமைப்பு (பிஆர்எஸ்) அடுத்த 7 நாட்களுக்கு, பயன்பாடுகள் குறைவாக இருக்கும் இரவு நேரங்களில் 6 மணி நேரம் மூடப்படும்” என்று அமைச்சகம் கூறியது.
நவம்பர் 14 மற்றும் 15-க்கு இடைப்பட்ட இரவு முதல் நவம்பர் 20 மற்றும் 21-க்கு இடைபட்ட இரவு வரை இந்திய ரயில்வே (Indian Railways) வழங்கும் பல சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.
இந்திய ரயில்வேயின் PRS சேவைகள், டிக்கெட் முன்பதிவு, நடப்பு முன்பதிவு (current booking), டிக்கெட் ரத்து (cancellation) மற்றும் விசாரணை சேவைகள் (enquiry services) உட்பட அனைத்து சேவைகளும் நவம்பர் 14 முதல் நவம்பர் 21 வரை, 23:30 மணி முதல் 0530 மணி வரை இடைநிறுத்தப்படும்.
“2021 வேலை நேர அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள MSPC (மெயில்/எக்ஸ்பிரஸ் சிறப்பு) மற்றும் HSP (விடுமுறை சிறப்பு) ரயில் சேவைகள் என தற்போது இயக்கப்படும் அனைத்து வழக்கமான நேர அட்டவணை ரயில்களும் வழக்கமான எண்களுடனும், இதற்கு பொருந்தும் கட்டணம் மற்றும் வகைப்படுத்தலுடனும் இயக்கப்படும்” என்று ரயில்வே வாரியம் முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது.