ஒன்ராறியோவில் இருந்து கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் மற்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் இருந்து இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 37,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேறியுள்ளனர். கடந்த 1980 காலகட்டத்தின் முற்பகுதியில் இருந்து இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டதில்லை என்றே தெரியவந்துள்ளது. மொத்தத்தில், ஒன்ராறியோ மாகாணம் கிட்டத்தட்ட 12,000 குடியிருப்பாளர்களின் நிகர இழப்பை எதிர்கொண்டுள்ளது.
மட்டுமின்றி, 1980களுக்கு பின்னர் இப்படியான ஒரு நிலையை ஒன்ராறியோ மாகாணம் சந்தித்ததில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் கனடாவின் எஞ்சிய பகுதிகளில் இருந்து சுமார் 25,000 மக்கள் ஒன்ராறியோவுக்கு குடிபெயர்ந்திருந்தனர்.
ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டுமின்றி, ஆல்பர்ட்டாவிலும் இரண்டாவது காலாண்டில் மொத்தம் 29,000 குடியிருப்பாளர்கள் வேறு மாகாணங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, ஜூலை 2020 முதல் 2021 ஜூலை வரையான ஓராண்டில் மட்டும் கிட்டத்தட்ட 85,000 குடியிருப்பாளர்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.ஆனால் 2019 மற்றும் 2020ல் இந்த எண்ணிக்கை 72,000 என இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒன்ராறியோவில் இருந்து வெளியேறியுள்ள 85,000 குடியிருப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.20,000கும் அதிகமானோர் மேற்கு கடற்கரை பகுதிகளில் குடியேறியுள்ளனர். கியூபெக் மற்றும் ஆல்பர்ட்டா மாகாணங்களில் 16,849 மற்றும் 16,469 பேர்கள் ஒன்ராறியோவில் இருந்து குடியேறியுள்ளனர்.
மட்டுமின்றி, நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக் மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு பகுதிகளில் குடியேறும் ஒன்ராறியோ மக்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டில் அதிகரித்தே காணப்பட்டுள்ளது.மேலும், ஜூலை 2020 முதல் 2021 ஜூலை வரையான ஓராண்டில் சுமார் 18,000 ஒன்ராறியோ மக்கள் குறிப்பிட்ட மூன்று மாகாணங்களில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.