கனடா புலம்பெயர்தல் அமைப்பு, 2022ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தின்போது தொழில்களை வகைப்படுத்துவது தொடர்பான புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
அந்த திட்டத்தின் மூலமாக செய்யப்பட உள்ள மாற்றங்கள், சில பொருளாதார வகுப்பினர் மற்றும் வெளிநாட்டவர்களை பாதிக்க உள்ளது.
ஆனாலும், யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்த விவரத்தை அரசு இன்னமும் வெளியிடவில்லை.
கனடாவில் தொழில்களை வகைப்படுத்துதல், National Occupational Classification (NOC) என அழைக்கப்படுகிறது.
அது ஆண்டுதோறும் மீளாய்வு செய்யப்படும், கனடாவின் தொழிலாளர் சந்தை மாற்றங்களுக்கிணங்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும்.
பத்து ஆண்டுகளுக்கொருமுறை தேவையான மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படும். அப்படி மாற்றங்களுக்குட்படுத்தப்பட்ட புதிய வகைப்பாட்டை (NOC 2021) கனடா புள்ளியியல் அமைப்பு கடந்த மாதம் வெளியிட்டுள்ளது.
இந்த NOC என்னும் வகைப்பாடு, திறன் வாய்ந்த பணியாளர் புலம்பெயர்தல் திட்டம் (skilled worker immigration program) மற்றும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் (Temporary Foreign Worker Program (TFWP) ஆகியவற்றை நிர்வகிக்க பெடரல் மற்றும் மாகாண அரசுகளால் பயன்படுத்தப்படுவதால், புலம்பெயர்தலுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
ஒரு புலம்பெயர்வோர் அல்லது தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்துக்கு விண்ணப்பிக்கிறவர் அதற்கான NOC தகுதி நெறிமுறைகளுக்கு உட்பட்டிருக்கவேண்டும்.
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை மற்றும் கனடாவின் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள், திறன் வாய்ந்த பணியாளர்கள் புலம்பெயர்தல் திட்டத்தை பரிசீலிக்க, தற்போது NOC 2016 என்ற வகைப்பாட்டைப் பயன்படுத்துகின்றன.
கனடாவின் வேலைவாய்ப்புத்துறை மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையும் (ESDC) தொழிலாளர் சந்தை தாக்க பரிசீலனை விண்ணப்பங்களை (LMIA) மதிப்பீடு செய்வதற்கு NOC 2016 வகைப்பாட்டைத்தான் பயன்படுத்துகின்றன.
LMIA என்பது கனடா அரசின் தொழிலாளர் சந்தை தேர்வாகும். Temporary Foreign Worker Program (TFWP) என்னும் திட்டத்தின் கீழ் இது அவசியமாகும்.
LMIA விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்போது, கனடாவின் வேலைவாய்ப்புத்துறை மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை (ESDC), ஒரு வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்துவது கனடா நாட்டவர்களான பணியாளர்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது நடுநிலையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை தீர்மானிக்கவேண்டியது அவசியம்.
அந்த நேரத்தில் வெளிநாட்டுப் பணியாளர்கள் LMIA தேர்வை எழுதுவதுடன் தங்கள் பணி உரிமத்துக்கு ஆதரவாக பணி வாய்ப்பு கடிதத்தையும் IRCCயிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
இந்த NOC 2021 வகைப்பாடு 2022ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தின்போது அமுல்படுத்தப்பட உள்ளது.
அதன்கீழ், திறன் அடிப்படையில் தொழில்களை வகைப்படுத்துவதற்கு பதிலாக, புதிதாக, பயிற்சி, கல்வி, அனுபவம் மற்றும் பொறுப்புக்கள் அமைப்பு Training, Education, Experience and Responsibilities (TEER) system என்னும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் தொழில்களை கனடா அரசு வகைப்படுத்த உள்ளது.
இந்த மாற்றம் புலம்பெயர்வோர் மீது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்?
NOC 2021 வகைப்பாடு அமுல்படுத்தப்பட்டதும், விண்ணப்பிக்கும் புலம்பெயர்வோர் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் திட்டம், NOC வகைப்பாட்டுடன் பொருந்தக்கூடியதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.