வினைத்திறனோடு செயற்படுவோமென அரச தலைவர் கூறுகின்றார், ஆனால் அவ்வாறு நடக்கும் என நான் நம்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் (Tharmalingam Siththardhan) தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தற்போதைய போக்குகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்றைய நிலையிலேயே இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இழந்து வருகின்றது. காரணம் விலைவாசி உயர்வு, சரியான முதலிலேயே ஆட்சி நடைபெறவில்லை என்ற எண்ணப்பாடு ஆகும். ஆரம்ப காலங்களில் அரசு மிகவும் திறமையாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்மாதிரியாக இருந்தாலும், அண்மைக்காலங்களில் பின்னடைவான நிலையிலேயே காணப்படுகின்றது.
அதே நேரத்தில் தடுப்பூசி போடப்படுவதில் மூன்றாம் உலக நாடுகளை பார்க்கின்ற பொழுது இலங்கை முன்னணியில் இருக்கின்றது.ஆனால் இரவோடிரவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது என்பது மக்கள் வாழ்வதற்கு கஷ்டமான மிக நெருக்கடியான நிலையை ஏற்படுத்தும்.
அரசு சரியாக செயல்படவில்லை என்பதை அரச தலைவர் அவர்களே கூறுகின்றார். வினைத்திறனோடு செயற்படுவோம் எனக் கூறுகின்றார் – பார்ப்போம் அவ்வாறு நடக்கும் என நான் நம்பவில்லை.
அரசாங்கத்திற்கான எதிர்ப்புக்கள் கூடிக்கொண்டே போகின்றது. இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.