வடக்கு மெக்சிகோவில் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தாக்குதலின் பின்னர் சிறைச்சாலையில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலை 7:00 மணிக்குப் பிறகு, குழு சிவாவா மாநில சிறைச்சாலையில் கார்களில் ஆயுதங்களுடன் வந்து காவலர்களை சுடத் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் 4 சிறை கைதிகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
24 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்றக் குழுக்களிலும் போதைப்பொருள் கடத்தலிலும் தொடர்புடைய கைதிகள் சிறைச்சாலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலின் போது, சிறைக்குள் நடந்த சண்டையில் 13 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், கொலையாளிகள் கருப்பு உடை அணிந்திருந்ததாகவும், பொலிசாரை விட அதிக ஆயுதம் ஏந்தியதாகவும், அந்த வழியாக செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறியுள்ளார்.