குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141ஆக உயர்வு!

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக உயர்வடைந்துள்ளது.

சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார் 500 பேர் மோர்பி நகரிலுள்ள கேபிள் பாலத்தின் மீது நேற்று மாலை திரண்டிருந்தனர். சுற்றுலாத் தலமாக விளங்கும் அந்த பாலத்தில் அதிகளவில் மக்கள் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக திடீரென அந்த தொங்குப் பாலம் அறுந்து விழுந்துள்ளது.

குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தனர். பலர் பாலத்தின் விழுந்த பகுதியைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி உயிருக்குப் போராடினர்.

இதனையடுத்து, இது குறித்து அறிந்த மக்கள் மற்றும் பொலிஸார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 141ஆக பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தொங்குப்பாலம் பழுதடைந்ததால், புனரமைக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது.

அரசின் டெண்டரைப் பெற்று தனியார் நிறுவனம் ஒன்று இந்த புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளது. பணி முடிந்த பின் அதிகாரிகள் பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்து சான்றிதழ் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு தலா 4 இலட்சம் ரூபாயும் மத்திய அரசு தலா 2 இலட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளது.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மூ, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து குஜராத்தில் பங்கேற்க இருந்த சில நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி இரத்து செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE