சியோல் தென் கொரியாவில் நடந்த சர்வதேச, ‘கிளைம்பிங்’ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு வீராங்கனை, ‘ஹிஜாப்’ அணியாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உள் அரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட செயற்கை சுவரில் ஏறும் போட்டியான, ‘சர்வதேச கிளைம்பிங் ஆசிய சாம்பியன்ஷிப்’ போட்டி கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்தது.
இதில் பல்வேறு நாட்டு வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர்.
மேற்காசிய நாடான ஈரானில் இருந்து 8 வீரர் – வீராங்கனையர், மூன்று பயிற்சியாளர்கள் வந்திருந்தனர். இதில், அந்நாட்டின் தலைசிறந்த கிளைம்பிங் வீராங்கனை எல்னாஸ் ரெகாபியும் இடம் பெற்று இருந்தார். இவர் கிளைம்பிங் போட்டியில் சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.
கடந்த 16ம் தேதி நடந்த போட்டியில், எல்னாஸ் ரெகாபி, ‘ஹிஜாப்’ எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாமல் பங்கேற்றார்.
ஈரான் பெண்கள் ஹிஜாப் அணிவது, அந்நாட்டில் கட்டாய சட்டமாக உள்ளது. அந்நாட்டு வீராங்கனையர் பிற நாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் போதும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என சட்டம் உள்ளது.
ஈரானில் ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண் கடந்த செப்., மாதம் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இது ஈரானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக பெண்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிளைம்பிங் வீராங்கனை எல்னாஸ் ரெகாபி ஹிஜாப் அணியாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று ஈரான் திரும்புவதாக இருந்த அவர், அவசரமாக நேற்றே ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஈரானில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் அதை ஈரான் அரசு மறுத்துள்ளது.
இதற்கிடையே, ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றதற்கு, வீராங்கனை ரெகாபி தன் சமூகவலைதள பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.