போருக்கு மத்தியில் உக்ரைன் மக்களின் பசியை போக்கும் வகையில் தினமும் 1,000 பேருக்கு இலவச உணவு வழங்கி இந்திய ஓட்டல் உரிமையாளர் சாதித்து வருகிறார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் உணவின்றி கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
தலைநகர் கீவ்வில் பசியால் வாடும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, ‘நியூ பாம்பே பேலஸ்’ என்ற உணவகத்தை நடத்தி வரும் இந்தியரான குல்தீப் குமார் என்பவர், இலவச உணவு வழங்கி வந்தார். தற்போது மக்களும் கடும் பசி, பட்டினியால் அவதிக்குள்ளாகி வருவதால், அவர்களுக்கும் இலவச உணவை வழங்கி ‘அன்னதானம்’ (லங்கர்) செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த பிப்ரவரி 20ம் தேதி முதல் மாணவர்களுக்கு, எளியவர்களுக்கு இலவச உணவு வழங்கி வந்தேன்.
ஆனால் தற்போது அனைத்து தரப்பினருக்கும் இலவச உணவு வழங்கி வருகிறேன். தினமும் 700 முதல் 1,000 பேருக்கு இலவச உணவு வழங்குகிறேன். எங்களது உணவகத்தில் இந்திய வகை உணவை தயாரித்து தான் மக்களுக்கு வழங்குகிறோம். இட்லி, வடை, அரிசி சாதம், கோதுமை ரொட்டி, சாம்பார் போன்ற உணவுகளை வழங்குகிறோம். ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் மக்களே தங்களது நாட்டில் அகதிகளாக சுற்றித் திரிகின்றனர். லட்சக்கணக்கானோர் உயிருக்கு பயந்து கார்கிவ், டொனெட்ஸ் நகரில் இருந்து இருந்து இடம்பெயர்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலான மக்கள் வயதானவர்கள். எங்களது இந்த இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து நடத்த உள்ளோம். மக்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால், உணவகத்தை புதிய வளாகத்திற்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.