நெப்டியூனின் தெளிவான வளையங்களை படம்பிடித்த ஜேம்ஸ் வெப்!

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெப்டியூன் கோளின் வளையங்களை துல்லியமாக படம்பிடித்து அசத்தியுள்ளது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

பூமியில் இருந்து 4.3 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சூரிய குடும்பத்தின் கடைசி கோளான நெப்டியூன். பனிக்கட்டியால் நிரம்பி ராட்சத கோளாக சூரியனை வலம்வரும் இந்த கோளிற்கு சனியைப் போன்று வளையங்கள் உண்டு. ஆனால் அந்த வளையங்களின் தெளிவான புகைப்படங்கள் இதுவரை நமக்கு கிடைக்காமலேயே இருந்து வந்தது.

முதன்முதலாக நெப்டியூன் வளையங்களுடன் இருக்கும் ஒரு தெளிவற்ற படத்தை நாசாவின் வாயேஜர் – 2 விண்கலம் 1989 ஆம் ஆண்டு எடுத்தது. அதன்பின்னர் நெப்டியூனின் வளையங்கள் மனிதனால் படம்பிடிக்கப்படாமலேயே இருந்தது. கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக மனிதக் கண்களுக்கு போக்குகாட்டி வந்த நெப்டியூனின் வளையங்களை கணக்கச்சிதமாக படம்படித்து அசத்தியுள்ளது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

நெப்டியூனின் அடர்த்தியற்ற வளையங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனது நியர் இன்ப்ராரெட் கேமரா (Near Infra Red Camera – NIRCAM) மூலம் படம்படித்திருக்கிறது. இதன் காரணமாக தனது வழக்கமான நீல நிறத்திற்கு பதிலாக ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது நெப்டியூன். நெப்டியூனுக்கு 14 துணைக்கோள்கள் இருக்கும் நிலையில் அவற்றில் கலாட்டியா, நயாட், தலசா, டெஸ்பினா, புரோட்டியஸ், லாரிசா மற்றும் ட்ரைடன் ஆகிய ஏழு துணைக்கோள்களையும் படம்படித்து அசத்தியுள்ளது ஜேம்ஸ் வெப்.

“இந்த மங்கலான, தூசி நிறைந்த வளையங்களை நாங்கள் கடைசியாகப் பார்த்து மூன்று தசாப்தங்களாகிவிட்டன. அகச்சிவப்பு ஒளியில் அவற்றைப் பார்ப்பது இதுவே முதல் முறை. வெப் தொலைநோக்கியின் மிகவும் நிலையான மற்றும் துல்லியமான படத் தரம், இந்த மங்கலான வளையங்களை நெப்டியூனுக்கு மிக அருகில் பார்க்க அனுமதிக்கிறது” என்று நெப்டியூன் அமைப்பு நிபுணர் ஹெய்டி ஹாம்மல் தெரிவித்தார்.

இவ்வளவு அட்டகாசமான நெப்டியூனின் வளையங்களின் புகைப்படங்களை புவிக்கு அனுப்பிய நாசாவின் வெப் தொலைநோக்கி தற்போது சேதமடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மத்திய அகச்சிவப்பு கருவியில் (Mid-Infra Red Instrument – MIRI) தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி நடுத்தர தெளிவுத்திறன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (மீடியம் ரேசொல்யூசன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி) அறிவியல் கண்காணிப்பு அமைப்பின் போது அதிகரித்த உராய்வைக் காட்டியதாக நாசா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE