தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று, கோபுரத்தை பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் உள்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நுழைவுச் சீட்டு 200 ரூபாய் ஆகும்.
வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படவுள்ளது.
வார நாட்களில் பிற்பகல் 02:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மதியம் 12:00 மணி முதல் 12:00 மணி வரையிலும் தாமரை கோபுரத்தை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பெரே வாவிக்கு அருகில் அமைந்துள்ள 30,600 சதுர மீற்றர் உயரமான தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
தாமரை கோபுரத்தின் மொத்த மதிப்பீடு முதலில் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டாலும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தபோது அதற்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 113 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஆனால், இந்தக் கோபுரத்தை அமைப்பதற்காக சீனாவிடம் இருந்து பெற்ற கடனில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது.
தாமரை கோபுரத்தின் மொட்டு பகுதியின் கீழே உள்ள பகுதியில் 3 தளங்கள் அமைந்துள்ளன., அந்தப் பிரிவில், டிஜிட்டல் சினிமா, ஒரு மாநாட்டு அரங்கம், பல பிரபலமான வணிக வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் நிறுவப்பட உள்ளன.
தாமரை கோபுரத்தின் மொட்டு உள்ள பகுதி 7 தளங்களைக் கொண்டது.
அதன் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் 2 விழா மண்டபங்கள் நிறுவப்பட்டுள்ளன மற்றும் ஐந்தாவது தளம் சுழலும் உணவகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
7வது தளம் பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நேற்று கிடைத்த வருமானம் புதிய சாதனையை எட்டியுள்ளது.
அதற்கமைய, திறக்கப்பட்ட முதல் நாளே பத்து லட்சம் ரூபாவை தாண்டி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.