கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் தரையில் கிடந்த பணப்பையை எடுத்து அதன் உரிமையாளரான ஜப்பானிய பேராசிரியரிடம் ஒப்படைத்த விமான நிலைய துப்புரவு பணியாளர் ஒருவர் பாராட்டப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி Matrunura Junko என்ற இந்த ஜப்பானிய பேராசிரியர் இலங்கை வந்திருந்தார். நாட்டில் உள்ள ஒரு அரிய புஸ்கோலா நூலை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்ப்பதற்காக அவர் இலங்கை வந்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, இலங்கையில் பயன்படுத்துவதற்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள கையடக்க தொலைபேசி நிறுவனமொன்றின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இந்த பரிவர்த்தனையின் போது, அவரது பணப்பை தரையில் விழுந்தது. அதை அறியாத பேராசிரியை சிம்மை பெற்றுக் கொண்டு விமான நிலையத்திலிருந்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் விமான நிலைய துப்புரவு தொழிலாளியான பி.பி.ஸ்வர்ணலதா இந்த பணப்பையை கண்டெடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
தவறவிடப்பட்ட பணப்பையில் இலங்கை ரூபாய் பெறுமதியில் 119390 ரூபாய் பணம் இருந்ததுடன், சிம் அட்டை விபரம் அடங்கிய பற்றுச்சீட்டும் அதில் காணப்பட்டுள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பேராசிரியையை தொடர்பு கொண்டு விமான நிலையத்திற்கு வந்து பணப்பையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, நேற்று முன்தினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலைய அனுமதிப் பத்திரம் வழங்கும் அலுவலகத்திற்கு வந்த ஜப்பானிய பெண் பணப்பையை பெற்றுக்கொண்டார்.
பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த விமான நிலைய துப்புரவு ஊழியர் பி.பி.ஸ்வர்ணலதா மற்றும் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வெகுமதிகளை வழங்கியதுடன் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.