சர்வதேச நாணய நிதியம் என்ற கோயிலில் காணிக்கை கட்டுவதால் மட்டும் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. நாமும் தீர்வைத் தேட வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்”என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”நாம் தொடர்ச்சியாக பிரச்சினைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் வகையிலேயே புதிய கூட்டணியை உருவாக்குகின்றோம்.
அதன் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் இணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியம் ஒரு தொகை கடனை வழங்குவதால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? அவ்வாறு தீர்ந்துவிடும் என நினைப்பவர்களும் உள்ளனர். ஆனால், அது உண்மையல்ல. நாமாக எழுந்து நிற்கும் தீர்வைத் தேட வேண்டும்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியுள்ள டலஸ் அணியுடனும் பேச்சு நடத்தப்படும். அத்துடன், தேசியவாத சக்திகள் மற்றும் மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் உட்பட கொள்கையை ஏற்கக்கூடிய அனைவரையும் எம்முடன் இணையுமாறு அழைக்கின்றோம்” என கூறியுள்ளார்.