உக்ரைன் ரயில் நிலையத்தில், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 25 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. போருக்கு இடையிலும், உக்ரைன் நேற்று முன்தினம் தன் சுதந்திர தினத்தை கொண்டாடியது. அப்போது, கிழக்கு உக்ரைனில் வீரர்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற ராணுவ ரயில் மீது, ரஷ்யா நேற்று முன்தினம் நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில், 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், ஒரு வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 6 மற்றும் 11 வயது சிறுவர்களின் உடல்களும், கார் தீப்பிடித்ததில் இறந்த மூவரின் உடல்களும் நேற்று கைப்பற்றப்பட்டன. இதனால், ரயில் நிலைய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
ஜெனிவாவில், ஐ.நா.வின் மனித உரிமைத் தலைவர் மிச்செல் பச்செலெட் நேற்று பேசுகையில், ”ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது. உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்,” என்றார்.