இலங்கையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த கலந்துரையாடல்

இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டிகள் மற்றும் பஸ்களை துரிதமாக அறிமுகப்படுத்துவது தொடர்பிலான பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று   இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் உள்ளதாகவும், அந்த முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றுவதன் மூலம் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், மலிவு விலையில் பயணிகளை பயணிக்கும் வசதியையும் ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

UNDP நிறுவனத்தின் முன்னோடி திட்டமாக அமுல்படுத்தப்பட்ட E-Mobility திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 300 முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்றுவதற்கும் மற்றும் அதற்கான முறைமை ஒன்றை தயாரிப்பதற்கும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

முழு திட்டத்திற்கும் UNDP நிறுவனம் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொழும்பு நகரில் மின்சார பஸ் சேவையை ஆரம்பிக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலிய நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழலின் விளைவுகளை குறைக்க இந்த நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, பயணிகள் போக்குவரத்து தொடர்பான அனைத்து நிறுவனங்களின் பொறுப்பையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதனூடாக, கட்டண நிர்ணயம் மற்றும் அபராதம் விதிக்கும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுவதாகவும், மின்சாரமாக மாற்றப்படும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE