மொட்டு அரசியல்வாதிகளை தனிமைப்படுத்துகின்றனர்!!

அரகலய போராட்டத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து தனிமைப்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்கான சதித் திட்டம் ஒன்று செயற்படுகிறது என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க குற்றஞ் சாட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு ஜனபல வேகய, ஜேவிபி, பெரட்டுகாமி மற்றும் தமிழ் டயஸ்போராவுக்கு தொடர்பான அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பின்னால் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த சதித்திட்டத்தில் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மொட்டு அரசியல்வாதிகளே இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் மக்களுடன் இணைந்து செல்வதைத் தடுப்பதே இவர்களின் பிரதான நோக்கம் என்றும் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் எதிர்வரும் தேர்தல்களில் மொட்டு அரசியல் கொள்கைகளை தோல்வியடையச் செய்வதற்காக இப்படி செய்ததாக தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் அரசியல் வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள மக்களின் அழுத்தத்தை சதிகார அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களால் தமக்கு சாதகமாக மாற்றியுள்ளனர். மே 09 மற்றும் ஜூலை 09 ஆம் திகதிகளில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் இலக்கு ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்தப் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை மொட்டுக் கட்சியிடமே உள்ளது.

சிலர் கூறுகிறார்கள் 69 இலட்சம் பேர் இணைந்து ஏற்படுத்திய மக்கள் பலம் முடிந்து விட்டது என்று. இந்தப் பாராளுமன்றம் 2020 இலேயே மக்களால் தெரிவு செய்யப்பட்டது. அந்த மக்கள் ஆணையை மறந்து பாராளுமன்றத்தின் உள்ளேயோ அல்லது அதற்கு வெளியேவோ செயற்பட முடியாது.

எங்களுடைய பிள்ளைகள், மகளிர், இளைஞர் பிரிவுகள் மற்றும் எம்முடன் இணைந்த ஏனைய நிறுவனங்கள் எங்களோடு இருக்கின்றன. அரசாங்கம் என்ற வகையில் கட்சியாக நாங்கள் சிறியதொரு பின்னடைவுக்கு உள்ளானது உண்மைதான். ஆனால் இன்னும் எங்களுடைய ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் எங்களோடு இருக்கிறார்கள்.

வீடுகளைத் தீ வைத்து பயமுறுத்தி மக்கள் மத்தியில் நாங்கள் செல்வதைத் தடுத்து எங்களுடைய அரசியல் கொள்கைகளை தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் இருந்ததை விடப் பலமாக இருக்க வேண்டும்.

அதற்காகவே ஊரில் எமது அரசியல் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். அரசியல் சதிகாரர்களுக்கு தேவையானபடி அரசியல் செய்ய நாங்கள் தயாராக இல்லை. இந்த போராட்ட சதியின் உண்மைத் தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இன்று நாட்டிலுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முன்னாள் ஜனாதிபதியோ அல்லது தற்போது இருக்கின்ற ஜனாதிபதியோ மட்டும் பொறுப்பானவர்கள் அல்ல. அதற்காக அன்றிலிருந்து இன்றுவரை உள்ள தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

அதே போன்று 83 இல் நடந்த ஹர்த்தால், யுத்தம், 83 கறுப்பு ஜூலை, பயங்கரவாதிகள் யுத்தம், குண்டுவெடிப்புகள், 88-89 இல் நடற்த அரசியல் கொடூரங்கள் போன்ற அனைத்தும் இந்த நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.அதற்கு தலைமை தாங்கிய அரசியல் கட்சிகள், குழுக்கள் பொறுப்பேற்க வேண்டும். அதே போன்று அரசாங்க அதிகாரிகளும் இந்த நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் நாங்கள் அனைவரும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஜனாதிபதிப் பதவிக்காக நாங்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தெரிவு செய்வதில் இந்த நிமிடத்தில் அதற்கான மிகப் பொருத்தமான தெரிவு அவராக இருந்தது. இந்த நேரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கோ அல்லது பொதுத் தேர்தலுக்கோ போக முடியாது. அதற்கான பலமான பொருளாதார நிலை நாட்டிற்குள் இல்லை.

அதனால் யாப்புப் படி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தேட வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. அதனால் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஜனாதிபதி ஆக்குவதற்கு மொட்டுக் கட்சியின் ஆதரவு கிடைத்தது.

இன்றும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கைவசம் இருக்கும் கட்சி மொட்டுக் கட்சி தான். அதனால் எந்த அரசாங்கத்தை ஏற்படுத்தினாலும் மொட்டுக் கட்சிக்கான ஆணையைப் புறக்கணிக்க யாராலும் முடியாது. சிலர் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள், குழுக்கள் தற்போது மொட்டுக்கட்சிக்கு ஆதரவு இல்லை என்று கூறுகிறது. ஏங்களுக்கான மக்கள் ஆணை இன்னும் இருக்கிறது. ஆனால் அவர்கள் தற்போது மௌனமாக இருக்கின்றார்கள். இந்த மௌனத்தை முறிப்பதற்கான காலம் வந்துள்ளது. அதனால் விழுந்த இடத்தில் இருந்து மீண்டும் எழுவோம்.

இந்த சதித் திட்டத்தை தோற்கடிப்போம. இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மீண்டும் அரசியல் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்தார். கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE