சீனாவின் யுவான் வாங் 5′ எனும் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி தென் கிழக்கிலிருந்து மணித்தியாளத்துக்கு 6 கடல் மைல் வேகத்தில் பயணிக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
11 ஆம் திகதி குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டையை அடைய திட்டமிட்டிருந்த போதும், அக்கப்பல் நேற்று நள்ளிரவு வரை துறைமுகத்தை வந்தடையவில்லை.
இருப்பினும் ‘ யுவான் வாங் 5’ கப்பல் ‘ சீ ஒப் ஸ்ரீ லங்கா’ எனும் இலங்கை கடலில், ஹம்பாந்தோட்டையிலிருந்து 580 கடல் மைல்களுக்கு அப்பால் அவதானிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் முகப்பானது, இலங்கையின் கிழக்குக் கடலில், வங்காள விரிகுடாவை நோக்கியதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி ‘ யுவான் வாங் 5’ கப்பல் தனது பயணப் பாதையை மாற்றியமையை அவதானிக்க முடிந்திருந்தது.
ஹம்பாந்தோட்டை நோக்கி வரும் அதன் பயணப் பாதை மாற்றப்பட்ட போதிலும், 11 ஆம் திகதி முதல் அது சரியான பயணப் பாதையில் ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்து வருகிறது.
ஏ.ஐ.எஸ். தரவு மேற்பார்வையின் பிரகாரம், ‘ யுவான் வாங் 5’ இன்று மாலை, இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு அருகே அமைந்துள்ள Ninety East Ridge எனும் கடல் அடிவாரத்தில் அமைந்துள்ள மலைத் தொடருக்கு மேலால் பயணிக்கின்றமை தெரியவந்தது.
அதன்படி அதன் பயணம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கியுள்ளமை மேலும் உறுதியாகியுள்ளது.
ஓகஸ்ட் 11 ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இந்த கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 28 ஆம் திகதி சீனா முன் வைத்த கோரிக்கைக்கு அமைய கடந்த ஜூலை 12 ஆம் திகதி இதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த 8 ஆம் திகதி, சீன தூதரகத்துக்கு வெளிவிவகார அமைச்சு, கப்பலின் பயணத்தை சற்று தாமதிக்குமாறு கோரி எழுத்து மூல கோரிக்கையினை முன் வைத்திருந்தது.
எனினும் அப்போதும் இலங்கையை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த யுவான் வாங் 5 கப்பல் வேகத்தைக் குறைத்துள்ள போதும் , இலங்கை நோக்கிய அதன் பயணம் தொடர்கிறது.
எவ்வாறாயினும் குறித்த கப்பல் இலங்கையின் கடல் எல்லையில் ‘ டெரிடோரியல் சீ ‘ எனும் பகுதியை அண்மித்து, அனுமதி கிடைக்கும் வரையில் நங்கூரமிட்டிருக்கும் திட்டத்துடன் தொடர்ந்து பயணத்தை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
‘ யுவான் வாங் 5’ கப்பலானது 750 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில் அமைந்துள்ள இடங்கள் தொடர்பிலான தரவுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டது என கூறப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அக்கப்பல் வந்தடையுமால், இந்தியாவின் தெற்கு பிரதேசத்தின் பாதுகாப்பு நிலையங்கள், ஆறு துறைமுகங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென எகொனொமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை முகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் இதில் அடங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.