இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றார்.
நம் அண்டை நாடான இலங்கையில் மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பினார். ஆசிய நாடான மாலத் தீவுகளுக்கு ஜூலை 13ம் தேதி சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
அவருக்கு அந்நாட்டில் வழங்கப்பட்டிருந்த குறுகிய கால ‘விசா’ நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து கோத்தபய சிங்கப்பூரில் இருந்து மற்றொரு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்குக்கு புறப்பட்டார்.முன்னதாக அவரை தாய்லாந்தில் தங்க அனுமதிப்பது தொடர்பாக இலங்கை அரசின் கருத்தை அந்நாட்டு அரசு கேட்டது.
இதற்கு இலங்கை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் கோத்தபய தாய்லாந்தில் மூன்று மாதங்கள் வரை தங்க முடியும். அதற்குள் ஒரு நாட்டில் நிரந்தரமாக தங்குவதற்கான முயற்சியில் அவர் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.