இந்த நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் பயங்கரவாதிகளின் நாடு என பெயரிட வேண்டும் என கலாநிதி அஜந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களுடைய அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து இன்று இலங்கை பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று போராட்டக்காரர்களினால் முறைபாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“இந்த நாட்டின் பெயரை மாற்ற வேண்டும். பயங்கரவாதிகளின் நாடு என பெயரிட வேண்டும். இது மிகவும் துயரமான நேரம். ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை விடுதலை செய்துக்கொள்ள நாட்டின் பிள்ளைகள் போராட்டத்தை நடத்தினர். அந்த சுதந்திரம் எமக்கு கிடைத்தது.
ராஜபக்ச குடும்பத்தின் மூன்று பேர் வெளியேறும் வகையில் போராட்டம் நடத்திய பிள்ளைகளும், நாட்டு மக்களும் திறமையை காட்டினர். தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையில் தற்போது நடக்கும் விடயங்கள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைய மாட்டோம்.
ஜனாதிபதியாக தெரிவானதும், எமது பிள்ளைகளை தாக்கி, தகவல் தொடர்பு நிலையத்தை உடைத்து, போராட்ட களத்திற்கு பெரும் சேதத்தை விளைத்ததை காணக்கூடியதாக இருந்தது. பிள்ளைகள், பிக்குமார், வாய் பேச முடியாதவர்களை தாக்கினர். படையினரை தாக்கினர். இதுவா ஆட்சியாளரின் வேலை
காலிமுகத்திடல் கரைக்கு சடலங்கள் மிதந்து வருகின்றன. கைகள் கட்டப்பட்ட கடலில் போடப்பட்ட பிள்ளைகளின் உடல்கள் மிதந்து வருகின்றன. என்ன நடக்கின்றது என்று கேட்பதற்காக பெற்றோர் ஓடி வருகின்றனர். பாதுகாப்பு தொடர்பாக எமக்கு பெரிய பிரச்சினை இருக்கின்றது.
அரசியலமைப்புச் சட்டத்தில் எமக்கு பேச்சுரிமை, போராடும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் உரிமை அரசியலலமைப்புச் சட்டத்தின் வழங்கப்பட்டுள்ளது. ஏன் அந்த உரிமைகளை ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் திருடுகின்றனர்.
இதனை நாங்கள் விரும்பவில்லை. நாட்டிற்கு பலனுள்ளவர்களாக வருவதை காணவே நாங்கள் பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்த்தோம். எமது பிள்ளைகள் சித்திரவதைக்கு உள்ளாவதை காண எவருக்கும் விருப்பமில்லை.
கைகள் கட்டப்பட்ட நிலை சடலங்கள் மீட்பு
பிள்ளைகளின் சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில், மிதந்து வரும் போது தாய்மார் என்ற வகையில் நாங்கள் எதனை உணர்வோம்.அந்த வலி புரியவில்லையா. இதனை புரிந்துக்கொள்ள முடியாத முட்டாள்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனரா? முட்டாள்களுக்கு தாய்மாரின் இந்த துயரம் புரியாதா, புரியவில்லையா? பிணங்கள் மிதக்கின்றன. வெள்ளை வான் வருகின்றன. வீடுகளுக்கு சென்று போராட்டகாரர்களை தேடுகின்றனர்.
இந்த நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் பயங்கரவாதிகளின் நாடு என பெயரிட வேண்டும். இலங்கை என்ற இலங்கை போல் இருக்க வேண்டும். பயங்கரவாத குழுக்களின் நாடு என்றால் அதனை போல் இருக்க வேண்டும்.” என்றார்.