தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம் அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவோடும் நாம் பேசுவோம். ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறோம் கோத்தபாய ராஜபக்ஷவுடனும் ஒரு தடவை பேசியிருக்கிறோம் இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று பாராளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார் இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா? அல்லது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச போன்று அனுராதபுரத்தில் பதவியேற்ற போதும் சரி தனது அக்கிராசன உரையிலும் சரி மக்களால் விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது.
40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள ஜனாதிபதி இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான் என்பதை புரிந்து வைத்திருப்பார் எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர் எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பிலும் பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.