நிராயுதபாணியான மக்கள், விசேட தேவையுடைய சிப்பாய்கள், சிவில் பிரஜைகள் மீது தமது ஆயுத பலத்தை திணித்து, தாக்குதல்களை மேற்கொண்ட உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைவருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உத்தரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் உள்ள ஜனநாயக உரிமைக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் மதிப்பளிக்க வேண்டும் என அறிக்கை ஒன்றினூடாக எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அரச சொத்துகள், தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமல், வன்முறைகளுக்கு எதிராக ஒழுக்கமான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துடன் தொடர்ச்சியாக தாம் இணைந்துகொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த அனைத்து இடங்களையும் அவர்கள் மீள கையளித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அதிகாலை பொழுதில் நுழைந்த பாதுகாப்பு தரப்பினர், உயர்மட்ட ஆணைக்கு அமைய பயமுறுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ஸ அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப முற்படுவதற்கு எதிரான வெறியில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தங்களுக்கு தெரியாது எனவும், அது அவ்வாறு இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.