ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட உள்ளமை இன்று உறுதியானது.
பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும், ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட உள்ளதாக நேற்று அறிவித்தார். அதேநேரம், தாம் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
நாடாளுமன்றத்துக்குள் ஜனாதிபதியை தெரிவு செய்யும் போட்டியின்போது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை நாங்கள் முன்னிலையாக்குவோம்.
நாடு தற்போது வீழ்ந்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தலைமைத்துவம் வழங்கி அந்த சவாலை ஏற்பதற்காக அவர் முன்னிலையாகின்றார்.
இந்நிலையில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் தலைமைத்துவத்தை பொறுப்பேற்கும் தருணம் முதல், அனைவரின் இணக்கப்பாட்டுடன் உருவாகும் இடைக்கால அரசாங்கம் ஊடாக, சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் முன்வைக்கும் யோசனை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கும் தாங்கள் தயார் என விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.